இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டி இறுதிக்கு முன்னேறிய இந்தியா... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டி இறுதிக்கு முன்னேறிய இந்தியா...





ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஜப்பானின் நிஷின் நகரில் இன்று (1) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 169 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணிக்காக அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய இஷான் கிஷன் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைப் பெற்றார். வைபவ் சூரியவன்ஷி 38 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சஹான் ஆரச்சிகே மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இலங்கை அணிக்காக நுவனிது பெர்னாண்டோ அதிகபட்சமாக 15 ஓட்டங்களைப் பெற்றார். சினேத் ஜயவர்தன, லசித் க்ரூஸ்புள்ளே மற்றும் சொஹான் டி லிவேரா உள்ளிட்ட ஐந்து வீரர்கள் ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 9.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 45 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் பட்டேல் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்மூலம் இலங்கை அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.



About Lanka Theepam