கேரளாவில் காதல் முறிவால் இளம்பெண் கொலை – ரிசார்ட்டில் நடந்த கொடூர சம்பவம்... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

கேரளாவில் காதல் முறிவால் இளம்பெண் கொலை – ரிசார்ட்டில் நடந்த கொடூர சம்பவம்...

 


இந்தியாவின் கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த தின்ஷா என்ற இளம்பெண் குறித்த ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி மதியம் 28 வயதுடைய ஜித்து என்பவர் ரிசார்ட்டுக்கு வந்து தின்ஷாவை சந்திக்க வேண்டும் எனக் கூறி அவரை வெளியே அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, ரிசார்ட் வளாகத்தில் உள்ள மரமொன்றின் அருகே இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில், அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது ஜித்து தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் தின்ஷாவை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை அவதானித்த ரிசார்ட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரைத் தடுக்க முயன்றுள்ளனர். எனினும், அவர் ஆயுதத்தைக் காட்டி அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்தவர்கள் இணைந்து ஜித்துவை கட்டுப்படுத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே, பலத்த காயமடைந்த தின்ஷா உடனடியாக கோழஞ்சேரியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஜித்துவை கைது செய்த கோயிபுரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கொலைக்கான பின்னணி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜித்துவும் தின்ஷாவும் கடந்த ஒரு வருடமாக காதல் உறவில் இருந்ததாகவும், அண்மையில் தின்ஷா அந்த உறவை முறித்துக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தின்ஷா ஏனைய ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தது மற்றும் அவரது தொலைபேசிக்கு வந்த சில குறுஞ்செய்திகள் தொடர்பாக இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தின்ஷாவை சந்திப்பதற்காக ரிசார்ட்டுக்கு வந்த ஜித்து, அவரை வெளியே அழைத்துச் சென்று தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த காட்சிகளில் இருவரும் ரிசார்ட் வளாகத்தில் நடந்து செல்வது, பின்னர் மரத்தடியில் பேசிக்கொண்டிருப்பது உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About Lanka Theepam