அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரைத் தளமாகக் கொண்ட ‘டாவ் ரோபோடிக்ஸ்’ (Tau Robotics) நிறுவனம், வீடுகளில் அன்றாடம் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளைச் செய்யக்கூடிய அதிநவீன ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுமார் 4.4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோக்கள், படிக்கட்டுகள், கார்பெட்கள் மற்றும் பல்வேறு தரைப்பரப்புகளில் நடந்து சென்று பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஸ்ப்ரே பாட்டில்கள் மற்றும் வேக்கம் கிளீனர்கள் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்தி தரையைச் சுத்தம் செய்வது, பாத்திரங்களைக் கழுவுவது, கழிப்பறையைச் சுத்தம் செய்வது மற்றும் படுக்கையை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட வீட்டு வேலைகளை இந்த ரோபோக்கள் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோபோக்கள் வீடுகளைச் சுத்தம் செய்யும் திறன் திருப்திகரமாக இருப்பதாக சில பயனாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும், மனிதர்கள் மேற்கொள்ளும் நுணுக்கமான துப்புரவுப் பணிகளுக்கு இந்த ரோபோக்கள் முழுமையான மாற்றாக அமைய முடியாது என துப்புரவுத் துறை சார்ந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த இடங்களில் இதுபோன்ற ரோபோக்கள் துப்புரவுப் பணிகளுக்கு உதவக்கூடும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டு வேலைகளில் மனிதர்களின் நேரத்தையும் உழைப்பையும் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்படும் ரோபோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இந்த முயற்சி கவனம் பெற்றுள்ளது.
.jpg)