டொராண்டோவில் மாலை நேர நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்த மூதாட்டி ஒருவரை அணுகிய பெண், அவரிடம் நெருக்கமாகப் பழகுவது போல் நடித்து அவரது தங்க நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் ஜூலை 28ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், டொராண்டோ பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
சம்பவத்தன்று மாலை, மூதாட்டி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு அருகில் கார் ஒன்று வந்து நின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. காரில் இருந்து இறங்கிய பெண், மூதாட்டியை அணுகி அவரது கால்களைத் தொட்டு வணங்கியதுடன், பின்னர் அவரைக் கட்டிப்பிடித்துள்ளார்.
ஆங்கிலத்தை சரளமாகப் பேசத் தெரியாத அந்த மூதாட்டி, குறித்த பெண் தனது அண்டை வீட்டைச் சேர்ந்தவர் என நினைத்ததாகக் கூறப்படுகிறது.
மூதாட்டி நிலைமையைப் புரிந்துகொள்வதற்குள், அவரது கழுத்தில் இருந்த தங்க நெக்லஸை அந்தப் பெண் கழற்றியுள்ளார். அதற்குப் பதிலாக மற்றொரு நெக்லஸை மூதாட்டியின் கழுத்தில் அணிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்று அவரது கைகளில் இருந்த தங்க வளையல்களையும் அந்தப் பெண் கழற்றிச் சென்றுள்ளார்.
பின்னர் குறித்த பெண் காரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் தனது தாயார் கடுமையான மன அதிர்ச்சிக்கு உள்ளானதாக அவரது மகன் ராகவேந்திர குமார் தெரிவித்துள்ளார். அச்சம் மற்றும் அதிர்ச்சியால் ஏற்பட்ட நடுக்கம் காரணமாக, சில நேரங்களில் அவரால் நடக்கக்கூட முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயாரின் உடல்நிலை குறித்தே முதலில் கவலைப்பட்டதாகவும், அந்தச் சூழ்நிலையில் நகைகளைவிட தனது தாயின் உயிரே முக்கியமானதாக இருந்ததாகவும் ராகவேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், 2008ஆம் ஆண்டு உயிரிழந்த தனது தந்தை, 1971ஆம் ஆண்டு திருமணப் பரிசாக அந்த நகைகளை வழங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவத்துக்குப் பின்னர், ராகவேந்திர குமார் அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) காட்சிகளைச் சேகரித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், சம்பவம் இடம்பெற்று பல மாதங்கள் கடந்துள்ள போதிலும் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே, ஜூலை 28ஆம் திகதி இடம்பெற்ற இந்த நகைத் திருட்டு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளில் காணப்படும் பெண் மற்றும் அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வாகனம் தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
