யாழ்ப்பாணம் – கேரதீவு, சங்குப்பிட்டி பாலப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த மன்னாரைச் சேர்ந்த 31 வயதான ஆர்னோல்ட் அன்ரனி என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் அமைந்திருந்த மதகுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.