கொழும்பு நகரம் முழுவதும் மெட்ரோ பஸ் (Metro Bus) சேவையை நாளை (29) முதல் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 121 பஸ்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு பொதுமக்களை அதிகளவில் ஊக்குவிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பஸ்களுக்கான முன்னுரிமை ஒழுங்கு (Bus Priority Lane) முறைமை முன்னதாக இலங்கை பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும், பல்வேறு காரணங்களால் அதனைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மெட்ரோ பஸ் சேவையின் ஊடாக குறிப்பிட்ட நேர அட்டவணைக்கு அமைய இயங்கும், அனைத்து இடங்களிலும் நிறுத்தப்படாத மற்றும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைக் கொண்ட முறையான பஸ் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, பஸ்களுக்கான முன்னுரிமை ஒழுங்கு முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு மெட்ரோ பஸ் சேவை மிகவும் பொருத்தமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, காலை 6 மணி முதல் 9 மணி வரை ஒரு திசையிலும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 7 மணி வரை எதிர்த் திசையிலும், வீதியில் உள்ள மூன்று வழித்தடங்களில் ஒரு வழித்தடத்தை பொதுப் போக்குவரத்து பஸ்களுக்காக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கொழும்பு நகரில் பொதுப் போக்குவரத்து சேவையின் செயல்திறனை அதிகரிப்பதுடன், தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.