டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் SLT-MOBITEL இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலங்கை AI வாரம் 2026 நிகழ்வின் முக்கிய நிகழ்வுகளான AI மாநாடு மற்றும் AI கண்காட்சி, கொழும்பு Monarch Imperial ஹோட்டலில் நேற்று (செப்டம்பர் 29) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வில் இலங்கை டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ பொறியியலாளர் எரங்க வீரரத்ன உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செப்டம்பர் 25ஆம் திகதி ஆரம்பமான இலங்கை AI வாரம் 2026, செயற்கை நுண்ணறிவு தொடர்பான அறிவு, புதுமை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது. அதன் முக்கிய அங்கங்களான AI மாநாடு மற்றும் AI கண்காட்சி செப்டம்பர் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறுகின்றன.
இரண்டு நாட்கள் நடைபெறும் AI மாநாட்டில் 16 நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறை பிரதிநிதிகள் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் மற்றும் அதன் பல்வேறு துறைகளுக்கான பயன்பாடுகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதேவேளை, AI கண்காட்சியில் 35க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்கின்றன. Huawei, ZTE, Sampath Bank, Snowflake, EDOTCO, Connex மற்றும் NCINGA உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது AI சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை காட்சிப்படுத்துகின்றன.
இந்நிகழ்வின் மூலம் சுகாதாரம், நிதி, தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அன்றாட வாழ்க்கையில் AI தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களையும் பார்வையாளர்கள் நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத், SLT Group தவிசாளர் கலாநிதி மோதிலால் டி சில்வா மற்றும் SLT-MOBITEL பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
AI கண்காட்சி இன்று (செப்டம்பர் 30) காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கொழும்பு Monarch Imperial ஹோட்டலில் பொதுமக்களின் பார்வைக்காக திறந்திருக்கும்.
பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு AI-வலுவூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை நேரடியாக அனுபவிப்பதுடன், வளர்ந்து வரும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அவை பல்வேறு தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் அறிந்துகொள்ள முடியும்.
இலங்கை AI வாரம் 2026 இறுதி நாளை எட்டியுள்ள நிலையில், நாட்டின் AI சார்ந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் புதிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு பங்களிக்கக்கூடும் என்பதை அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு இந்தக் கண்காட்சி ஒரு வாய்ப்பாக அமைகிறது.
