கடந்த 24 மணி நேரத்திற்குள் கிரிந்திவெல மற்றும் கடுகன்னாவ பொலிஸ் பிரிவுகளில் இரண்டு மனிதக் கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்களும் நேற்று (29) இடம்பெற்றுள்ளன.
கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் 75 வயதுடைய பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது, வீட்டிலிருந்து உயிரிழந்த பெண்ணின் கணவரால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், குறித்த பெண்ணின் கணவரே கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவத்துக்குப் பின்னர் சந்தேகநபரான கணவர், வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் மற்றும் சந்தேகநபரான கணவரின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக வதுபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடுகன்னாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலுன்கல பகுதியில் மதுபான போத்தலால் தாக்கப்பட்டு காயமடைந்த 39 வயதுடைய நபர் ஒருவர் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு சம்பவங்கள் தொடர்பிலும் கிரிந்திவெல மற்றும் கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
