3 வயதில் கின்னஸ் சாதனை – தந்தையுடன் இணைந்து அசத்திய சிறுமி - Global Tamil Voice உலக தமிழ் குரல்

3 வயதில் கின்னஸ் சாதனை – தந்தையுடன் இணைந்து அசத்திய சிறுமி

 


அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி பெலிசிட்டி ரஷ், தனது தந்தையுடன் இணைந்து ஹூலா ஹூப் வளையத்தில் மேற்கொண்ட முயற்சியின் மூலம் கின்னஸ் உலக சாதனையை முறியடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

டேவிட் ரஷ் (41) மற்றும் ஜெனிபர் ரஷ் தம்பதியினரின் மகளான பெலிசிட்டிக்கு, அவரது தந்தை ஹூலா ஹூப் வளையத்தில் பயிற்சி செய்வதைப் பார்த்து அதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

பெலிசிட்டியின் சகோதரர்களான 12 வயது ஜெரெமி மற்றும் 10 வயது பீட்டர் ஆகியோரும் தந்தையின் வழிகாட்டுதலுடன் பல்வேறு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளனர். இதனால் தானும் கின்னஸ் உலக சாதனை சான்றிதழைப் பெற வேண்டும் என்ற விருப்பத்தை பெலிசிட்டி தனது தந்தையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பெலிசிட்டியின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு டேவிட் ரஷ் அவருக்கு ஹூலா ஹூப் வளையம் தொடர்பான பயிற்சியை வழங்கியுள்ளார். குழந்தைக்கு ஆர்வம் இருக்கும் நேரங்களில் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பயிற்சி பெற்ற பெலிசிட்டி, கடந்த மாதம் 29ஆம் திகதி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தந்தையுடன் இணைந்து, 30 விநாடிகளில் பின்னோக்கிச் சுழற்றப்படும் ஹூலா ஹூப் வளையத்திற்குள் சென்று வெளியே வரும் முயற்சியை அவர் 9 முறை வெற்றிகரமாக செய்துள்ளார்.

இதன் மூலம், இந்தியாவைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் கோகுல்நாத் தனது மகனுடன் இணைந்து 30 விநாடிகளில் 8 முறை ஹூலா ஹூப் வளையத்திற்குள் சென்று வெளியே வந்து படைத்திருந்த சாதனையை பெலிசிட்டி முறியடித்துள்ளார்.

பெலிசிட்டியின் சாதனை தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில் கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் நேற்று (29) வழங்கப்பட்டது.

இதுகுறித்து டேவிட் ரஷ் கூறுகையில், பெலிசிட்டிக்கு ஆர்வம் இருக்கும் நேரங்களில் மட்டுமே பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட்டதாகவும், அவர் முயற்சிக்க விரும்பியபோது பயிற்சி செய்து, சோர்வடைந்தபோது நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

About Lanka Theepam