மட்டக்களப்பில் கடத்தப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி உயிரிழப்பு! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு சந்திவெளியில் கடத்தப்பட்டு விபத்தில் சிக்கி உயிரிழந்த யுவதி தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் உயிரிழந்த யுவதியின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
ஸ்ரீதரன் திவ்யசாகரி (19) என்ற யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்
குடும்பத்தாருடன் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது இரவு தேநீர் அருந்துவதற்காக சந்திவெளியில் கார் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த நேரம் அங்கு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய இரண்டு இளைஞர்கள் யுவதியைக் கடத்தி மோட்டார் சைக்கிள் ஆசனத்தின் நடுவில் ஏற்றிக் கொண்டு அதிவேகமாகப் பயணித்துள்ளனர்.
இதன்போது, யுவதியின் தாய் மற்றும் பெரிய தந்தை ஆகியோர் தாம் வந்த காரில், யுவதியைக் கடத்திக் கொண்டு அதிவேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே அதிவேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விபத்தில் கடத்தப்பட்ட யுவதி உட்பட கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களும் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் சிகிச்சை பெற்றுவந்த யுவதி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
யுவதியைக் கடத்தி சென்றதாகக் கூறப்படும் காயங்களுக்குள்ளான இளைஞர்களான பாலசிங்கம் சஞ்ஜீவன் மற்றும் பிரதீபன் திவ்வியகேஷன் ஆகியோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது கடத்தி சென்றதாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவரும் காரில் வந்தவர்கள்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.
குறித்த வாக்குமூலத்தின்படி காரில் வந்த யுவதியின் பெரியப்பாவான வசந்தராசபிள்ளை மற்றும் கார் சாரதியான பகிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் வினோபா இந்திரன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே குறித்த யுவதிக்கும் இளைஞனுக்கும் பல வருடங்களுக்க முன்னர் காதல் தொடர்பு காரணமாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து வழக்கு தொடரப்பட்டு சமரசமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த யுவதியை உயர் கல்விக்காக அவரது தாய் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த யுவதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியிருந்த நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், யுவதி இந்தியாவில் இருக்கும் போதும் தொடர்ந்தும் தனது காதலனுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை யுவதியின் உடற்கூற்றுப் பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை குருநாகல் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி இலங்கரத்னவினால் குருநாகலில் மேற்கொள்ளப்பட்டது.

About UK TAMIL NEWS