பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனால், நீண்ட நாட்களாக இப்படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புக்காகக் காத்திருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கடந்த 1996-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமான இந்தியன் 2 திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியானது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. மேலும், படத்தின் திரைக்கதை மற்றும் உருவாக்கம் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
இருப்பினும், இந்தியன் படத்தின் மூன்றாம் பாகமான இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு தொடர்ந்து எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இப்படத்தின் வெளியீடு மற்றும் அடுத்தகட்ட அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், லைகா நிறுவனம் இந்தியன் 3 திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. அதில், “Senapathy is back with zero tolerance. The resurgence begins in Indian 3 War Mode” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, மீண்டும் சேனாபதியின் அதிரடியைக் காணக் காத்திருக்கும் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், முந்தைய பாகத்தைப் போல அல்லாமல், வலுவான திரைக்கதையுடன் ரசிகர்களைக் கவரும் வகையில் படத்தை உருவாக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியன் 3 திரைப்படத்தின் இந்தப் புதிய அப்டேட்டைத் தொடர்ந்து, படத்தின் அடுத்த அறிவிப்பு எப்போது வெளியாகும், படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
