இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் கோத்தகுடம் மாவட்டம், வெங்கண்ணபாலம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிணி என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அதே பகுதியைச் சேர்ந்த பவன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பி.எஸ்.சி. நர்சிங் கல்வியைத் தொடர்ந்து வந்த ஹரிணி, கடந்த மாதம் 21ஆம் திகதி தனது வீட்டின் கழிவறைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பவன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது தொலைபேசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (01) பவன் கைது செய்யப்பட்டார். பொலிஸாரின் விசாரணையில், காதல் மற்றும் திருமணம் தொடர்பான தகராறே கொலைக்குக் காரணமாக இருந்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பொலிஸாரிடம் பவன் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலத்தில், ஹரிணியும் தானும் சுமார் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்கனவே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, திருமணத்திற்கு குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை எனவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தனது மோசமான நடத்தை மற்றும் சில பழக்கவழக்கங்கள் காரணமாக ஹரிணி தன்னை விட்டு விலகத் தொடங்கியதாகவும், அவர் தனது Instagram கணக்கையும் மாற்றியதாகவும் பவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஹரிணி வேறு ஒருவரை காதலிப்பதாக சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 21ஆம் திகதி ஹரிணி கோத்தகுடெமில் உள்ள தனது அத்தை வீட்டிலிருந்து வெங்கண்ணபாலத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரிடம் பேசுவதற்கு பவன் முயன்றதாகவும், தொலைபேசியில் தொடர்புகொண்டபோது ஹரிணி அழைப்பைத் துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
அன்றைய தினம் பிற்பகல் சுமார் 3.20 மணியளவில் ஹரிணியின் தாய் அருகிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றதைத் தொடர்ந்து, பவன் ஹரிணியின் வீட்டிற்குள் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு ஹரிணியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பவன் வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, தான் கொண்டு வந்திருந்த பைக்கின் கிளட்ச் வயரைப் பயன்படுத்தி ஹரிணியின் கழுத்தை இறுக்கியதாகவும், பின்னர் அவரது உடலை வீட்டின் கழிவறைக்கு அருகில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் பவன் வாக்குமூலம் அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட பவனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
