தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, அவர்களது ரசிகர்களுக்கு இடையே போட்டி ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக ரஜினிகாந்த் – கமல்ஹாசன் காலத்துக்குப் பிறகு விஜய் – அஜித் ரசிகர்களின் போட்டி மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.
விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், இரு நடிகர்களும் தங்களது ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வலியுறுத்தி வந்தனர்.
ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு இடையிலான மோதல்கள் கடுமையான நிலையில் சென்றாலும், தற்போது விஜய் – அஜித் ரசிகர்களிடையே காணப்பட்ட அந்த தீவிரமான போட்டி ஓரளவு தணிந்துள்ளது. இரு நடிகர்களும் ஒருவருக்கொருவர் நட்புடன் இருப்பதை வெளிப்படுத்தும் சம்பவங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
குறிப்பாக, அஜித் பங்கேற்ற கார் பந்தய நிகழ்வை விஜய் நேரில் சென்று பார்வையிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, இருவரது ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டன.
இந்நிலையில், நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித், விஜய்யுடனான தனது போட்டி குறித்து பேசியுள்ள கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.
அவர் கூறுகையில், எந்தத் துறையாக இருந்தாலும் இரண்டு நபர்களுக்கு இடையே போட்டியும், பொறாமையும் இருப்பது இயல்பானது என்றும், அதேபோன்ற போட்டி தனக்கும் விஜய்க்கும் இடையிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“அப்படித்தான் எனக்கும் விஜய்க்கும் இருக்கிறது. ஆனால் நாங்கள் எதிரிகள் கிடையாது. இருவரும் தனித்தனியாக நடிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது,” என அஜித் தெரிவித்துள்ளார்.
விஜய் – அஜித் இருவருக்கும் இடையிலான போட்டியை ரசிகர்கள் பல ஆண்டுகளாக வெவ்வேறு கோணங்களில் பார்த்து வரும் நிலையில், அஜித்தின் இந்தக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.