பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு அரச மற்றும் தனியார் முதலீடுகள் அவசியம் எனவும், எனினும் அனைத்து முதலீடுகளும் பொறுப்புக்கூறலுடனும் முறையான ஒழுங்குமுறையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 30ஆம் திகதி நடைபெற்ற கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையத்தின் (CWIT) இரண்டாம் கட்டத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதிலும் துறைமுகத் துறை முக்கிய பங்காற்றுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்து சமுத்திரத்தின் பிரதான கடல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அருகாமையில் இலங்கை அமைந்துள்ளமை நாட்டுக்குக் கிடைத்துள்ள முக்கியமான பொருளாதார வாய்ப்பு எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் காணப்படும் நவீன துறைமுகக் கட்டமைப்பு, பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான அணுகல் ஆகியவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் நிலையான முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
CWIT முனையத்தில் நவீன தொழில்நுட்பம்
கொழும்புத் துறைமுக மேற்கு சர்வதேச முனையத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி பாரந்தூக்கிகள் (Automated Cranes), மின்சார முனைய வாகனங்கள் (Electric ITVs) மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்பு முறைமைகள் (Real-time Monitoring Systems) உள்ளிட்ட நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களையும் பிரதமர் பாராட்டினார்.
அதேவேளை, துறைமுகத்தின் பௌதிகக் கொள்ளளவை அதிகரிப்பதுடன், நவீன தொழில்நுட்பங்களைச் செயற்படுத்தக்கூடிய உள்நாட்டு தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் மனிதவளத்தை மேம்படுத்துவதும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதில் அரச முதலீடுகளுக்கு இணையாக தனியார் முதலீடுகளும் முக்கியமானவை எனக் குறிப்பிட்ட பிரதமர், முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் பொறுப்புக்கூறல் மற்றும் முறையான ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், முதலீடுகளின் அளவை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அவற்றின் தரம், பேண்தகுதன்மை மற்றும் இலங்கையின் நீண்டகால பொருளாதார மற்றும் மூலோபாய இலக்குகளுடன் அவை பொருந்துகின்றனவா என்பதையும் கவனமாக ஆராய வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் வாய்ப்பு
இலங்கையின் பொருளாதார எதிர்காலம் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் கட்டியெழுப்பப்படும் வலுவான உறவுகளுடன் தொடர்புடையது என பிரதமர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, இலங்கையின் முக்கிய பொருளாதார மற்றும் பிராந்திய பங்காளிகளில் ஒன்றான இந்தியாவுடனான வர்த்தகம், முதலீடு மற்றும் மக்கள் தொடர்புகளை இரு நாடுகளினதும் பரஸ்பர அபிலாஷைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு மதிப்பளித்து மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.