மண்டபத்தில் 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல். - Global Tamil Voice உலக தமிழ் குரல்

மண்டபத்தில் 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்.

 


ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை மரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த நாகேஸ்வரன் என்பவரையும் கைது செய்து, சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், தனுஷ்கோடி, மண்டபம், மரைக்காயர்பட்டினம், குந்துகால், வேதாளை, களிமண்குண்டு உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகள் வழியாக சட்டவிரோதமாகப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தப்பட உள்ளதாக மரைன் பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சி ராணி தலைமையிலான பொலிஸார் உச்சிப்புளி அருகே தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மண்டபம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து வாகன ஓட்டுநர் நாகேஸ்வரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாத்திரைகள் வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டதாகத் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சரக்கு வாகனம் மற்றும் 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளைப் பறிமுதல் செய்த மரைன் பொலிஸார், நாகேஸ்வரனை கைது செய்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் வாகனம், மாத்திரைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் ஆகியோர் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

வேதாளை கடற்கரையில் 286 கிலோ பீடி இலை பறிமுதல்

இதனிடையே, வேதாளை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத கடத்தல் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மரைன் பொலிஸார் நள்ளிரவில் கடற்கரையோரப் பகுதியில் திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பொலிஸாரின் வருகையை அறிந்த கடத்தல்காரர்கள், 286 கிலோ எடையுள்ள 10 பீடி இலை மூட்டைகளை கடற்கரையில் கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரையில் கிடந்த 10 பீடி இலை மூட்டைகளையும் மரைன் பொலிஸார் பறிமுதல் செய்து, அவற்றை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இரு சம்பவங்கள் தொடர்பாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About GTV