இலங்கைக்கு தெற்கே கடலில் ஆபத்தில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள், இலங்கை கடற்படையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நேற்று (24) கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 22ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே கடலில் கவிழ்ந்த இந்தோனேசிய மீன்பிடிப் படகான ‘KM Garuda Jaya VI’ இல் குறித்த மீனவர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்பு பகுதிக்கு உட்பட்ட கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த மீனவர்கள் ஆபத்தில் இருப்பது தொடர்பான தகவல் முதலில் அப்பகுதியிலிருந்தே கிடைத்துள்ளது.
இதனையடுத்து, ‘MV Moonstone’ என்ற வர்த்தகக் கப்பல் கடலில் சிக்கித் தவித்த 25 பேரையும் மீட்டு, இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) தகவல் வழங்கியுள்ளது.
அவசர அழைப்பிற்கு பதிலளித்த கொழும்பு MRCC-யின் ஒருங்கிணைப்பின் கீழ், இலங்கை கடற்படை இரண்டு படகுகளை அனுப்பி, MV Moonstone கப்பலால் மீட்கப்பட்ட மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளது.
பின்னர், மீட்கப்பட்ட 25 இந்தோனேசியர்களும் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்த நடவடிக்கைகளுக்காக அவர்கள் இலங்கையில் உள்ள இந்தோனேசிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
