இலங்கையின் பாதுகாப்புப் படைகள் உலகின் மிகவும் தொழில்முறைப் படைகளில் ஒன்றாக உருவாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த இலக்கை அடைய தேவையான பயிற்சி மற்றும் வசதிகளை வழங்க தேவையான ஒதுக்கீடுகள் முறையாகச் செலவிடப்படுவதை உறுதி செய்யுமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சின் முதற்கட்ட பாதீடு விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டார்.
2025 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட பாதீடு ஏற்பாடுகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இந்தக் கலந்துரையாடலில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, சிவில் பாதுகாப்புத் துறை மற்றும் கேடட் அதிகாரிகளுக்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களும் இதன்போது ஆராயப்பட்டன.
இத்தகைய பயிற்சி மற்ற அரசுத் துறைகளின் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதை விட வேறுபட்டது என்பதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த விடயத்தில் குறிப்பாக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புத் துறை உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் அதே இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது உத்தரவிட்டார்.