கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது:வடக்கு ஆளுநர்! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது:வடக்கு ஆளுநர்!

 எமது மாகாணத்தில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் சேர்த்து எங்கள் அனைவருக்கும் உள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் நேற்று (22.08.2025) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு பாடசாலைகளின் வளர்ச்சி அந்தந்த பாடசாலையின் அதிபரையே சாரும். எனவே அந்தந்த சமூகத்துக்கு உரிய பொறுப்புக்களை அந்தந்த பாடசாலை அதிபர்களே ஏற்க வேண்டும்.

ஒவ்வொரு வலயக் கல்வி பணிப்பாளர்களும் அடிக்கடி பாடசாலைகளுக்கு களப் பயணம் மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செல்லுகின்ற பொழுது அங்கே காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் வளப் பங்கீடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வளப் பங்கீடுகளுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்களே பொறுப்பு. தங்களின் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றாத வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் - நிதி, திட்டமிடல், கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவலர்கள் திணைக்களப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


About UPDATE