கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் போதைப்பொருள் இருப்பதாகக் கிடைத்த தகவல் தொடர்பில் நடவடிக்கை எடுத்த விதம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட சில பொலிஸ் அதிகாரிகள் கடமை தவறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு மேற்கொண்ட உள்ளக விசாரணையிலேயே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் 31ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின்படி, சட்டவிரோத போதைப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஒகஸ்ட் 14ஆம் திகதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவலை அவர் அன்றைய தினமே பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், ஒகஸ்ட் 22ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஏகநாயக்கவிற்கும் இதுதொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
அதன் பின்னர் அவர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஒகஸ்ட் 31ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று சுங்க அதிகாரிகளுடன் இணைந்து குறித்த கொள்கலனைத் திறந்துள்ளார். இதன்போது அதிலிருந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
எவ்வாறாயினும், போதைப்பொருளை கைப்பற்றுவதற்கான முதன்மையான நடவடிக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, கிடைத்த தகவல் தொடர்பில் நடவடிக்கை எடுத்த விதத்தில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகள் கடமை தவறியதுடன், அலட்சியமாகச் செயற்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உள்ளக விசாரணைக்கு மேலதிகமாக குற்றவியல் விசாரணையொன்றை முன்னெடுப்பது பொருத்தமானது என பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவல் தொடர்பில் நடவடிக்கை எடுத்தபோது வெளிப்பட்டதாகக் கூறப்படும் கடமை தவறுதல் மற்றும் அலட்சியப் போக்கு, ஏதேனும் தரப்பினருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இடம்பெற்றதா என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணையின் ஊடாக சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக்கூடிய நிலை உள்ளதா என்பது உறுதி செய்யப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
.jpg)